யாழில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

0
37

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இதன்போது ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த 39 வயதுடைய குணரட்னம் குமரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தார். இதன்போது மின்னல் அவர் மீது தாக்கியது.

இந்நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.(photo-Fb)

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள்

இடி, மின்னல் தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படும் வகையில், உயிர் சேதங்களை தவிர்த்து கொள்ளும் விதமாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் சில செயற்பாட்டு முறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இடி, மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமிடத்து வெளியில் செல்வதையோ, வாகனங்களில் பயணிப்பதையோ தவிர்த்துகொள்ள வேண்டுமென்பதோடு, பொது வெளிகள் மற்றும் திறந்த மைதானங்களில் நிற்றலை முற்றாகத் தவிர்த்துகொண்டு, தங்களுக்கும் நிலத்துக்குமிடையேயான தொடுகை பரப்பையும் உயரத்தையும் குறைத்து கொள்ளும் வகையில் இரு கைகளாலும் இரு காதுகளையும் பொத்தி, கால் பெருவிரல்களை ஒன்று சேர்த்து அமர்வதன் மூலம் இந்த தாக்கத்திலிருந்து மீள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வயல்​வெளிகளில் நிற்பவர்கள் தங்கள் கைகளில் கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களை இடி, மின்னல் தாக்கத்தின் போது வைத்திருப்பதை முற்றாக தவிர்க்குமாறும், வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் மின்சுற்றுக்கள் குறித்து மிகவும் கவனமாக செயற்படுமாறும் கூறப்படுகின்றது.