முல்லைத்தீவில் மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

0
61

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் (07.05.2025) உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளியடி வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தரின் சடலம் புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அருமைநாயகம் யசோதரன் எனும் 42 வயது மதிக்கதக்க குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள்

இடி, மின்னல் தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படும் வகையில், உயிர் சேதங்களை தவிர்த்து கொள்ளும் விதமாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் சில செயற்பாட்டு முறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இடி, மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமிடத்து வெளியில் செல்வதையோ, வாகனங்களில் பயணிப்பதையோ தவிர்த்துகொள்ள வேண்டுமென்பதோடு, பொது வெளிகள் மற்றும் திறந்த மைதானங்களில் நிற்றலை முற்றாகத் தவிர்த்துகொண்டு, தங்களுக்கும் நிலத்துக்குமிடையேயான தொடுகை பரப்பையும் உயரத்தையும் குறைத்து கொள்ளும் வகையில் இரு கைகளாலும் இரு காதுகளையும் பொத்தி, கால் பெருவிரல்களை ஒன்று சேர்த்து அமர்வதன் மூலம் இந்த தாக்கத்திலிருந்து மீள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வயல்​வெளிகளில் நிற்பவர்கள் தங்கள் கைகளில் கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களை இடி, மின்னல் தாக்கத்தின் போது வைத்திருப்பதை முற்றாக தவிர்க்குமாறும், வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் மின்சுற்றுக்கள் குறித்து மிகவும் கவனமாக செயற்படுமாறும் கூறப்படுகின்றது.