இன்றைய கால தலைமுறையினரிடம் சுய இன்பம் காணுதல் என்பது பொதுவான விஷயமாக மாறிவிட்டது. பெண்களை காட்டிலும், ஆண்களே அதிகமாக சுய இன்பம் காண்பதாக மருத்துவர்களே கூறுகின்றனர். பொதுவாக சுய இன்பம் என்பது தங்களின் பாலியல் அழுத்தத்தை தாமாக விடுவித்துக் கொள்ள உதவும் ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. இதற்கு யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த பாலியல் அழுத்தத்தை வெளிப்படுத்தாமல் இருந்தால், அதுவே மன அழுத்தத்திற்கு வழிவகுக்கக் கூடும் என கூறுகின்றனர். அந்தவகையில், பார்த்தால் சுய இன்பம் என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால், அதுவே ஒரு அடிக்ஷனாக மாறி தினமும் செய்கிறார்கள் என்றால், அது பிரச்சனையில் தான் முடியும் என்கிறர் சித்த மருத்துவர் யோக வித்யா. அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ”இன்று பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர். இது நல்ல விஷயமாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு தினமும் சுய இன்பம் காண்பது நல்லதல்ல. திருமணத்திற்கு முன்பு யாருடைய உதவியும் இன்றி தன்னைத்தானே திருப்திப்படுத்திக் கொண்டால், எதிர்காலத்திலும் யாரையும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியே செய்தாலும் அவர்களுக்கு அதில் திருப்தி இருக்காது. எனவே, அவர்கள் தனக்கு தானே சுய இன்பம் செய்து கொள்ள விரும்புவார்கள்.
அதுமட்டுமன்றி அவர்களுக்கு நீண்ட நேர காத்திருத்தல், ஃபோர்பிளே எதுவுமே இல்லாமல் எடுத்ததுமே சுய இன்பத்தில் ஈடுபடுவதால், 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறிவிடும். இதனால் நீண்ட நேரம் விந்துவை தக்க வைக்கும் திறனை அவர்கள் இழக்கிறார்கள். இவர்கள், திருமணத்திற்கு பின் தன்னுடைய பாலியல் ஆசையை மனைவியிடம் பூர்த்தி செய்து கொள்ள மாட்டார்கள். இப்படியே இருந்தால், திருமண உறவில் விரிசல் உண்டாக வாய்ப்பு உண்டு. எனவே, அடிக்கடியோ அல்லது தினமுமோ திருமணத்திற்கு முன் சுய இன்பம் காண்பதை தவிர்ப்பது நல்லது” என்கிறார் மருத்துவர்.