இந்தியாவின் கர்நாடகாவில் 10 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி, ஐந்து ஃபுல் பாட்டிலை ராவாக குடித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகல் பகுதியில், கார்த்திக் என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். 21 வயதான இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விபரீத பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். 5 ஃபுல் பாட்டில் மதுபானத்தை தண்ணீர் எதுவும் கலக்காமல் ராவாக குடிக்க வேண்டும் என்று நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். அதன்படி, 5 ஃபுல் பாட்டில் மதுவை ராவாக குடித்து விட்டால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நண்பர்கள் வில்லங்கமான டாஸ்க் வைத்துள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்ட கார்த்திக்கும் தண்ணீரை குடிப்பது போன்று, 5 பாட்டில் மதுபானத்தைவும் ராவாக குடித்ததாக கூறப்படுகிறது. மது குடித்த சிறிது நேரத்திலேயே அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நங்கலி போலீசார், கார்த்திக்கின் நண்பர்கள் வெங்கட ரெட்டி, சுப்பிரமணி உள்ளிட்ட ஆறு பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில், இருவரை கைது செய்த போலீசார், எஞ்சிய நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். உயிரிழந்த கார்த்திக்கிற்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின், மனைவிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், 10 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி, ஐந்து ஃபுல் பாட்டிலை ராவாக குடித்த கார்த்திக், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.