பாணந்துறை, மாலமுல்ல, பின்வல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவின் போது இன்று (29) அதிகாலை, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான நிலங்க என்பவரின் நெருங்கிய உறவினரான பாணந்துறை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சதுரங்க என்பவரே துப்பாக்கிதாரிகளில் இலக்காக அமைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிகள் தமது இலக்கான சதுரங்கவை நோக்கி சுட முயன்றபோது, கூட்டமாக சிலர் நடனத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களில் ஒருவர் துப்பாக்கிதாரியை கல்லால் தாக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது, துப்பாக்கிதாரி அந்த நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில், அங்கிருந்த மற்றொரு நபருக்கும் வெடி பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், துப்பாக்கிதாரிகளின் இலக்காக இருந்த சதுரங்க என்பவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, துப்பாக்கிதாரிகள் தப்பியோடியுள்ளனர்.
இதில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகளை கல்லால் தாக்க முயன்ற 35 வயதுடைய கசுன் ஹரிச்சந்திர என்பவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் 20 வயது இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நீதிமன்றத்தைத் தவிர்த்து தலைமறைவாக உள்ள “குடு சலிந்து” எனும் புனைப்பெயர் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாணந்துறையில் போதைப்பொருள் கடத்தல் குடு சலிந்துவின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி, நிலங்க என்பவரின் கட்டுப்பாட்டிற்கு சென்றதே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக, குடு சலிந்துவுடன் இணைந்து செயல்பட்ட நிலங்க என்பவர், பின்னர் அவரிடமிருந்து பிரிந்து, தனியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிரண பொலிஸ் மேற்கொண்டு வருகிறது.