தனது பாடசாலையில் உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ரிதீகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியிலிருந்து பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஆவார்.
கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக, குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற திலிண விராஜ் என்ற மாணவன் சென்றிருந்தான்.
திலிண செல்லும் வழியில், அதே பாடசாலையில் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்றும், மற்றொரு வெளியாட்கள் குழுவும், தனிப்பட்ட பகைமையை காரணமாகக் கொண்டு அவனைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது, பாதுகாப்பு தலைக்கவசங்களால் மாணவனின் தலையில் தாக்கப்பட்டதால், அவர் மயக்கமடைந்து, முதலில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், குருணாகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தெரியவந்ததும், வெளிநாட்டில் இருந்த திலிணவின் தாய் தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார். மாணவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குருணாகலை – வெலெகெதர பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.










