இலஞ்சம் பெற்ற சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது..!

0
53

100,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – வவுனியா வழித்தடத்தில் இயக்கப்படும் திருகோணமலை டிப்போவிற்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வாளர்கள் சரிபார்த்த போது, பயணி ஒருவருக்கு டிக்கெட்டினை வழங்காமை தொடர்பில் பேருந்தின் நடத்துனராகப் பணியாற்றிய முறைப்பாட்டாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இருப்பினும், சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி, முறைப்பாட்டாளருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரணையை முடித்து, மீண்டும் பணியில் அமர்த்த 100,000 ரூபாயை இலஞ்சமாக கோரியுள்ளார்.

பின்னர் சந்தேக நபர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி மூலம் பணத்தை கோரி பெற்றுள்ளார்.

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தில் பணிபுரியும் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் நேற்று (22) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.