யாழ் சுன்னாகம் சம்பவம்; 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம்.!

0
389

சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் பொலிஸார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி, இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த பெண் கூறுகையில்…

”நாங்கள் வாகனத்தில் பயணித்துக்கொண்டிந்த வேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எம்மை முந்தி சென்று விபத்துக்கு உள்ளானர்கள். அவர்கள் மதுபோதையில் இருந்தமையால், நாங்களும் வாகனத்தை நிறுத்தி விட்டு, இருந்தோம்.

அப்போது சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் சாரதி அனுமதி பத்திரம், வாகன ஆவணங்களை கேட்டிருந்தனர். சிவில் உடையில் உள்ள உங்களுக்கு அதனை காண்பிக்க தேவையில்லை. விபத்து நடந்துள்ள இடத்திற்கு போக்குவரத்து பிரிவு பொலிசாரை வரவழையுங்கள் என கூறினார்.

அதற்கு சிவில் உடையில் வந்திருந்தவர்கள் எனது கணவனை மூர்க்க தனமாக தாக்கினார்கள். அதனை தடுக்க சென்ற என்னையும் தாக்கி, எனது இரண்டு மாத குழந்தையையும், என் கையில் இருந்து பிடுங்கி எறிந்தனர். பின்னர் சீருடையில் வந்த பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் எனது கணவரையும் கைது செய்துள்ளனர்” என தெரிவித்தார்.

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி அராஜகமாக நடந்து கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.