கொலை சம்பவம் தொடர்பில் பெண் உள்ளிட்ட 8 பேர் கைது.!

0
86

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததுடன் மேலும் இருவரை படுகாயமடைய செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியாபான பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டைநடத்திய சந்தேகநபர், குற்றத்தின் பின்னர் துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகநபர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மேலும் 05 சந்தேகநபர்களுடன், பெண் சந்தேகநபர் ஒருவரும் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (03) வெல்லவாய, அஹங்கம மற்றும் மிதிகம பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், அவர்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கியை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம, வெலிகம மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேகநபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,542,000/- ரூபாய் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர், வெளிநாட்டில் இருந்து இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.