மோட்டார் சைக்கிளை பாலத்தில் நிறுத்த முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு.!

0
165

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த நண்பர்கள் மூவர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மற்றைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பகல் 11 மணியளவில் பழுகாமத்தில் இருந்து பெரியபோரதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் தவறி மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து பொலிசார் பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரையும் மோட்டர் சைக்கிளையும் மீட்டதுடன் அவருடன் பயணித்த இரு நண்பர்களையும் கைது செய்தனர்.

இதில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!