பொலிஸ் அதிகாரி போல் நடித்து பெண்களை நாசம் செய்த முன்னாள் இராணுவ வீரர் கைது.!

0
192

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பெண்களை அச்சுறுத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அதற்கு உதவி செய்த ஒருவரை கெஸ்பேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர் போலி பொலிஸ் அடையாள அட்டையையும் தயாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலைய பெண் ஊழியர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் அந்த முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

அதன்படி முச்சக்கரவண்டியில் ஏறி சிறிது தூரம் சென்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் பொலிஸ் அடையாள அட்டையை காட்டியுள்ளார்.

இதன்போது, பொலிஸ் அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், குறித்த பெண்ணிடம் தாம் விபச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து அனைத்துத் தகவலையும் கண்டுபிடித்துவிட்டதாக கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர் அவளை பல்பொருள் அங்காடிக்கு அருகில் அழைத்துச் சென்று, அவள் அணிந்திருந்த நகை, இரண்டு பென்டன்ட்கள் மற்றும் வளையல்களை வலுக்கட்டாயமாக கழற்றிவிட்டு, அவளது ஏடிஎம் கார்டில் இருந்து 150,000 ரூபாவை எடுத்துக்கொண்டு பிலியந்தலை மொரட்டுவ வீதியிலுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் செல்வது சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் பிலியந்தலை நகருக்கு அழைத்து வந்து வேறு முச்சக்கரவண்டியில் அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவத்தை எதிர்கொண்ட ஆடைத் தொழிலாளியான பெண் கடந்த 15ஆம் திகதி கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகநபர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், முச்சக்கரவண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளுக்கு அமைய படுவந்தர, லுல்வல பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்தனர். முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபர் 57 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

போலி பொலிஸ் அடையாள அட்டை, ஐஸ் போதைப்பொருள், நடிகை உட்பட 5 பெண்களின் தேசிய அடையாள அட்டை, ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, 18 சிம் அட்டைகள், 5 ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபருக்கு உதவி புரிந்த முச்சக்கரவண்டி சாரதியும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வாவின் புகைப்படத்தை சந்தேக நபர் போலி பொலிஸ் அடையாள அட்டைக்காக பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் பொலிஸ் பரிசோதகர் அஜித் டி சில்வா என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபரின் கைப்பேசியை பரிசோதித்த போது, ​​ஆடைத் தொழிலாளி மற்றும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் போல் நடித்து பெண்களை ஏமாற்றி மிரட்டி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

தாம் கொள்ளையடிக்கும் பணத்தை நடிகைகள் மற்றும் அழகான பெண்களை வைத்துச் செலவு செய்வதாகவும், அவர்களுடனான தனது உடலுறவை கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிப்பதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மோசடிகளில் சிக்கியவர்கள் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.